சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவிப்பு
சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவிப்பு;
முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறி உதகை அருகே பைக்கரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பழங்குடியின கிராம பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், காப்புகாட்டை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் யானை நடமாடி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் சோலார் மின்வேலிகளில் உபயோகிக்கப்படும் மின்னழுத்த திறனை மின் வாரியத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்...... நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை சோலூர், கோக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சுற்றி திரிந்த நிலையில், இன்று பழங்குடியின மக்கள் வாழும் பகல்கோடு மந்து மற்றும் 9வது மயில் பகுதியில் உலா வந்தது. பகல் கோடு மந்து பகுதியில் காப்புகாட்டை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தின் அருகே உலா வந்த காட்டு யானை விளைநிலங்களை சேதப்படுத்தி பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பைக்காரா வனச்சராக வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக விவசாய நிலங்களை ஒட்டி அமைந்துள்ள விளைநிலங்களில் யானையின் நடமாட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மின்வாரியத்துறை கிராமிய உதவி செயற்பொறியாளர் தலைமையில் மின்வாரியத் துறை மற்றும் வனத்துறையினர் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் சோலார் மின்வேளிகளில் உபயோகிக்கப்படும் மின்னழுத்த திறனை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காட்டு யானையின் நடமாட்டம் இருப்பதால் உயர் மின்னழுத்த பேட்டரி மற்றும் மின்வேலிகளை பயன்படுத்தக் கூடாது, யானையின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை வழங்கியும் கிராமப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.