குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா
தேசிய அறிவியல் தின விழா ;
தேசிய அறிவியல் தொழில் நுட்ப மன்றம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம் ஆகியவற்றின் நிதி நல்கையில், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா -2025 பிப்.24, 25 ஆகிய இரு தினங்கள் கல்லூரி முதல்வர் பேராசியர் முனைவர் அ.ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவிகள் பங்கேற்ற அறிவியல் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நிகழ்வுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி, அறிவியல் விழிப்புணர்வுக்கான வீடியோ தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 44 பள்ளிகள், 18 கல்லூரிகளைச் சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும் என மொத்தம் 1,076 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பிப்.25 அன்று ஒரு நாள் காளான் வளர்ப்பு மற்றும் அதனை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியில் 44 சுய உதவிக்குழு மகளிரும், 40 மாணவிகளும், 22 பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். தொடக்கநாள் விழாவில் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் பேராசிரியர் முனைவர் து .ரோசி, நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பொறுப்புத் துணைவேந்தர் குழு உறுப்பினர் டாக்டர் பாரதஜோதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வுகளை தேசிய அறிவியல் தின ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சகாயகிரி,, மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.