ராமநாதபுரம் கோயில் திருவிழா பூக்குழி விழா நடைபெற்றது
முதுகுளத்தூர் அருகேஸ்ரீதர்ம முனீஸ்வரர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சனிக்கிழமை அலகுவேல் குத்தி பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.;
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதர்ம முனீஸ்வரர், ஸ்ரீபெரிய கருப்பண்ணசுவாமி மாசி திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. கீழச்சாக்குளம் ஸ்ரீவிநாயகர் கோயிலில் இருந்து வான வேடிக்கை, மேள தாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று ஸ்ரீதர்ம முனிஸ்வரர் கோயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் அலகுவேல் குத்தி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் நேர்த்திக் கடனுக்காக வழங்கிய 150 க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலியிட்டு, பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முதுகுளத்தூர், கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம் பகுதியிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கீழச்சாகுளம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.