ராமநாதபுரம் மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கச்சிமடத்தில் மீனவர்கள் திருவோடு மற்றும் மண்சட்டி ஏந்தி பிச்சையெடுக்கும் நூதன பேராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-03-03 10:41 GMT
ராமநாதபுரம் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மத்திய,மாநில அரசுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் திருவோடு மற்றும் மண்சட்டி ஏந்தி பிச்சையெடுக்கும் நூதன பேராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மீன்பிடிக்க சென்ற 42 மீனவர்கள் மற்றும் 8 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை கண்டித்து, படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 24 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக துறைமுகத்தில் 560 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சார்பு தொழிலாளர்கள் என 25 ஆயிரம் பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். 25 கோடி மதிப்பிலான இறால்,மீன் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கை வலியுறுத்தி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவ சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாக திங்கட்கிழமை நடைபெறும் போராட்டத்தில் திருவோடு மற்றும் மண் சட்டி ஏந்தி பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய,மாநில அரசுகள மீனவர்களை பாதுகாக்க தவறி விட்டதாக கூறி கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் பிச்சை எடுத்துள்ள பணத்தை அரசுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த பேராட்டத்தில், மாவட்ட விசைப்படகு மீனவ சங்கத்தலைவர் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தார். மீனவ சங்கத்தலைவர்கள் எமரிட்,சகாயம்,தெட்சிணமூர்த்தி,ஆன்வீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Similar News