ஏற்காட்டிற்கு கல்வி சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள்

கலெக்டர் பிருந்தாதேவி வழி அனுப்பி வைத்தார்.;

Update: 2025-03-12 07:15 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா தொடக்க நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி சுற்றுலா செல்லும் வகையில் 5 வயதிற்குட்பட்ட 50 குழந்தைகள் ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் வேன்கள் மூலம் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களை கலெக்டர் வழி அனுப்பி வைத்தார். முன்னதாக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளியை கலெக்டர் பிருந்தாதேவி வீல்சேரில் கலை நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அழைத்து சென்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News