ஜனநாயக வழியில் எதிர்ப்பை காட்டிய பாஜகவினரை கைது செய்வது நியாயமில்லை: ஜி.கே. வாசன்
டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலை எதிர்த்து, ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டவர்களை, அனுமதிக்காமல் கைது செய்தது கண்டிக்கதக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.;

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றதை சுட்டிக்காட்டி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியினரை, தி.மு.க அரசு கைது செய்ததும் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து இருப்பதும் மிகவும் கண்டிக்கதக்கது. ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக வழியில் அமைதியான முறையில் போராட்டத்தின் மூலம் சுட்டிக்காட்ட முயற்சிக்கும் போது அவற்றை தைரியமாக எதிர்கொள்ளாமல் பா.ஜ.க. தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதும், மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை கைது செய்தும் தமிழக அரசு தனது அதிகார பலத்தை காட்டுகிறது, இது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல, நியாமில்லை. இதை தமிழ் மாநில காங்கிரஸ் வன்யைாக கண்டிக்கறது. அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழும் போது அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல் அடக்குமுறையை கையாள்வது அவர்களின் இயலாமையை வெட்டவெளிச்சமாக காட்டுகிறது. நாள்தோறும் டாஸ்மாக்கின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வருமானத்தை சுரண்டும் நிர்வாகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் ஊழல் செய்து நாட்டை சீர்கேடாக்குவது வருத்தம் அளிக்கிறது. ஜனநாயக வழியில் தங்களின் எதிர்ப்பை காட்டிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்வது நியாயமில்லை. கைது செய்தவர்களை எந்தவித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.