மகளிர் சுய உதவிக்குழுக்களின் சந்திப்பு கூட்டம்
திண்டுக்கல் பார்சன்ஸ் கோர்ட் ஹோட்டலில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது;

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் மற்றும் விற்போருக்குகிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சுபாஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாசலம், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சதீஷ் பாபு வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை வகித்து, மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளில் வாங்குவோர் மற்றும் விற்போருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் திட்டமாக வறுமை ஒழிப்பின் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம் ஊரகப் பொருளாதாரம் மேம்பாடு அடைகிறது. நமது மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 9,823, நகரப்புற பகுதிகளில் 4127 குழுக்களும் மொத்தம் 13 ஆயிரத்து 950 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மகளிர் திட்டம் மதி அங்காடி, கட்டாய கண்காட்சி, விருப்பக் கண்காட்சி, இயற்கைச் சந்தை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு இப்பொழுது நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் இருந்து 207 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் கொண்டுவரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் காய்கறிகள், கைவினைப் பொருட்கள், எண்ணெய், சோப்பு, உணவு பண்டங்கள், தேன், சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனை 107 நிறுவனங்கள் ரூ 2.30 கோடி அளவிலான வணிக ஒப்பந்தங்கள் நடைபெற்றது. இதனால் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்களுக்கும் இதன் மூலம் விற்பனை வாய்ப்புகள் பெற்று வருமானமும் வாழ்வாரதாரம் உயருகிறது. என பேசினார். முன்னதாக மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை கண்காட்சி கலெக்டர் சரவணன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் வேல்முருகன், உதவி திட்ட அலுவலர்கள் அருண்குமார், பிரியங்கா, ரம்யா, மாவட்ட வள பயிற்றுனர் குமார், செல்லப்பாண்டி உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.