லிங்கம்பட்டியில் புதிய தொழிற்பேட்டை: முதல்வர் திறந்து வைத்தார்!

லிங்கம்பட்டி ஊராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.;

Update: 2025-03-27 03:37 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டி ஊராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டையை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், லிங்கம்பட்டி கிராமத்தில் 60.00 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்தொழிற்பேட்டையில் முதல் கட்டமாக 11.11 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.51 கோடி செலவில் 31 தொழில் மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 2000 நபர்கள் நேரடியாகவும், 3000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். அதேபோல் நமது தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், கல்மேட்டில் உப்புத் தொழில் குழுமத்திற்கு ரூ.4.26 கோடி செலவில் பொது வசதி மையத்தினை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கா.கருணாநிதி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் ஸ்வர்ணலதா, கிளை மேலாளர் (சிட்கோ திருநெல்வேலி) சத்யராஜ், வட்டாட்சியர்கள் சண்முகபெருமாள் (கோவில்பட்டி), சுபா (எட்டயபுரம்), அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து காெண்டனர்.

Similar News