பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும்: ஆட்சியர் தகவல்
எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.;

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள நூறாண்டு பழமையான பாரதியார் பிறந்த இல்லத்தின் மேல் தளம் மழையால் பாதிக்கப்பட்டு இன்று (25.03.2025) மாலை விழுந்துவிட்டது. இந்த நினைவிடத்தை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நிதியமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாரதியார் பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். பொதுப்பணி துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் பாரதியார் பிறந்த இடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு விரைவில் மறு சீரமைக்கப்படும். அதுவரை சுற்றுலா பயணிகள் யாரும் பாரதியார் பிறந்த இல்லத்தை பார்வையிட வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.