சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்ஐ ஜாமீன் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தெடார்புடைய காவல் உதவி ஆய்வாளரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.;

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தெடார்புடைய காவல் உதவி ஆய்வாளரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இதையடுத்து, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிபிஐ தரப்பில் கடந்த 2020-இல் காவல் ஆய்வாளர் உள்பட 9 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசராணை விவரங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தனக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கர் "மனுதாரரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.