குமரியில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை பதிவிடுவதாக மிரட்டியதாக கைதான நாஞ்சில் ஜெயக்குமார் என்பவர் இதுபோன்ற வழக்குகளில் சிறையில் ஏற்கனவே இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தக்கலை அருகே உள்ள கொற்றிக் கோடு பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் ஜெயக்குமார். இவர் ரியல் எஸ்டேட், பில்டிங் காண்ட்ராக்ட் போன்ற தொழில்களை செய்து வந்தவர். பின்னர் இவர் திமுக கட்சியில் ஐக்கியமானார். அப்போது இவரது தொகுதி திமுக எம்எல்ஏ மூலம் அரசியலில் தடம் பதித்தார். பின்னர் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவுடன் திமுக கட்சி இவரை ஒதுக்கியது. உடனடியாக இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி செயல்பட்டு வருகிறார். இவர் ஏற்கனவே நாகர்கோவிலில் கோட்டாறு பகுதியில் உள்ள ஒரு பெண் பல் மருத்துவ டாக்டரிடம் சில்மிஷம் காட்டியதாக பாதிக்கப்பட்ட டாக்டர் அளித்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நாகர்கோவில் மற்றொரு பெண்ணிடமும் இதுபோன்று சில்மிஷ புகாரில் ஈடுபட்டு போலீசார் விசாரணை வளையத்தில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது மூன்றாம் முறையாக தக்கலை பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிடம் நெருங்கி பழகி அந்த ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட போவதாக மிரட்டியதால் சைபர் கிரைம் போலீசார் மூலம் தற்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட தகுந்ததாகும்.