தொடர் விடுமுறையை முன்னிட்டு வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்
குழந்தைகளோடு செல்பி எடுத்தும், பந்து விளையாடியும் பொழுது போக்கிய பெற்றோர்;
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு,3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நிறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேளாங்கண்ணிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் நாளைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வந்த இஸ்லாமியர்களும், வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். கீழ் திசை நாடுகளில் லூர்து நகரம் என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு, வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், தற்போது கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு தற்போது இருந்தே, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணிக்கு வருகை தர தொடங்கி உள்ளனர். பாத யாத்திரையாக பல்வேறு பகுதிகளிலிருந்து வேளாங்கண்ணிக்கு வந்திருந்த பக்தர்கள், இங்கேயே முகாமிட்டு தங்களது பொழுதை உற்சாகமாக கழித்து வருகின்றனர். மேலும், தற்போது சுட்டெரித்து வரும் கோடை வெயிலுக்கு இதமாக பலரும் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வேளாங்கண்ணி கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கடற்கரை பகுதியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில், தங்களது குழந்தைகளோடு சேர்ந்து, பெற்றோர்களும் குழந்தைகளாக மாறி ஒருவருக்கு ஒருவர் செல்ஃபி எடுத்தும், பந்து கொண்டு விளையாடி உற்சாகமடைந்து வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பலரும் குடை பிடித்துபடி பலரும் கடைவீதி, பழைய மாதா கோவில், நடுத்திட்டு, மாதா குளம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொழுதை கழித்து வருகின்றனர்.