கோவில் நிர்வாகி நியமனத்தில் திமுக - அதிமுகவினர் வாக்குவாதம்

பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனத்தில், தி.மு.க., அ.தி.மு.க., வினரிடையே வாக்குவாதம்;

Update: 2025-04-03 09:14 GMT
  • whatsapp icon
தர்மபுரி டவுன் கடைவீதியில் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. இது, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஏராளமாக உள்ளது. இந்த நிலையில், கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இன்று, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு, செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது, திமுக வைச் சேர்ந்த மாவட்ட பொருளாளர் தங்கமணியை அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்வதற்காக, நகர செயலாளர் நாட்டான்மாது மற்றும் கவுன்சிலர்கள் உடன் வந்தனர். அதே சமயம், அ.தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 23வார்டு கவுன்சிலர் நாகராஜ் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். தி.மு.க.,வை சேர்ந்த தங்கமணியை அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். கோவிலுக்கும் வார்டுக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு நபர் எப்படி இந்த கோவிலில் அறங்காவலராக நியமிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதில், தி.மு.க., நகர செயலாளர் மற்றும் அ.தி.மு.க., வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எங்கள் தரப்பில், 4 உறுப்பினர்கள் உள்ளோம். எங்களை நியமிக்க வேண்டும் இல்லையேல், முறையாக தேர்தல் நடத்துங்கள் என அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். இதனால், வேறுவழியின்றி, தி.மு.க.,வினர் மற்றும் ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். மற்ற கோவில்களில், திமுக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் கைகாட்டும் நபர்களை அறங்காவலர் குழு உறுப்பினராக, உதவி ஆணையர் மகாவிஷ்ணு நியமித்து வந்தார். பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் எதிர்ப்பு கிளம்பியதால், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News