விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தர்பூசணியில் கலப்படம் இல்லை
சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்;

தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக பரவிய தகவலால், விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. அதையடுத்து விவசாயிகள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தர்பூசணி குறித்த அச்சத்தை போக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.கலெக்டர் உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி டோல் பிளாசா அருகே விற்பனை செய்த தர்பூசணி கடையில் ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் உள்ளிட்ட அதிகாரிகள், தர்பூசணி பழத்தை பொதுமக்கள் முன்னிலையில் அறுத்து காண்பித்தனர். பின்னர், ரசாயன கலப்படம் குறித்து அவர்கள் கூறியதாவது;தர்பூசணியில் செயற்கை நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஊசி மூலம் ரசாயனத்தை தர்பூசணியில் ஏற்றினால் அது 24 மணி நேரத்தில் ஊசி செலுத்திய வழியாகவே வெளியேறிவிடும். அந்த பழத்தை அறுத்து பார்த்தால் உள்ளே கன்னிப்போய் இருக்கும். கோடைகாலங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை தர்பூசணியில் இருக்கும் லைக்கோபின் திரவம் சரி செய்வதுடன், 'ஹீட் ஸ்ட்ரோக்'கை தடுக்கிறது. தர்பூசணியை அச்சமின்றி சாப்பிடலாம்' என்றார்.ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சி, ஸ்டாலின், ராஜேந்திரன், ராஜரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.