சுடுகாடு இடம் பிரச்னை நடுக்குப்பத்தில் போலீஸ் குவிப்பு
கோட்டகுப்பம் அருகே பதற்றம்;

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரிய கோட்டக்குப்பம் காலனி மக்களுக்கு, நடுக்குப்பம் கடற்கரை அருகில் உள்ள ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் ஒதுக்கப்பட்டு, சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.இதற்கிடையே நடுக்குப்பம், தந்திரயான்குப்பம் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கடற்கரையோரம் கருங்கற்கள் கொட்டப்பட்டது. இதனால் நடுக்குப்பம், மீனவர்களுக்கு படகுகளை நிறுத்த போதுமான இடம் இன்றி படகுகளை ஆதிதிராவிடர் காலனி சுடுகாடு பகுதியில் நிறுத்தி வருகின்றனர்.இதனால் இரு தரப்பினருக்கும் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், விழுப்புரம் ஆர்.டி.ஓ., தலைமையில், நடுக்குப்பம் மீனவர்கள் மற்றும் பெரிய கோட்டக்குப்பம் காலனி தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில், நடுக்குப்பம் மீனவர்கள் தங்களின் படகுகளை, காலனி சுடுகாடு பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை மீனவர்கள் படகுகளை எடுக்காமல் உள்ளனர்.இந்நிலையில், ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த லோகேஸ்வரி, 26; நேற்று முன்தினம் இறந்தார்.அவரது உடலை நேற்று மாலை 5;00 மணிக்கு நடுக்குப்பம் கடற்கரையோரம் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இரு தரப்பினருக்கும் சுடுகாடு இடம் பிரச்னை நீடித்து வருவதால், அப்பகுதியில் நேற்று கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.