
தமிழகத்தில் நெல் வரத்து அதிகம் உள்ள மார்க்கெட் கமிட்டியாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மார்க்கெட் கமிட்டி உள்ளது.இங்கு சீசன் நேரத்தில் தினமும், 25 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் விற்பனைக்கு வரும். மற்ற இடங்களை விட கூடுதல் விலை கிடைப்பதால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளும் இங்கு நெல் கொண்டு வருகின்றனர்.நெல் வரத்திற்கு ஏற்ப இடவசதி இல்லை. குறிப்பாக நெல் ஏலம் நடத்துவதற்கு மேற்கூரையுடன் கூடிய ஏலக்கூடம் இரண்டு மட்டுமே உள்ளன.எனவே, பெரும்பான்மையான நாட்களில் திறந்த வெளியில் ஏலம் நடக்கும். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு 269 விவசாயிகள் 6,000 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இந்த நெல் மூட்டைகளை திறந்த வெளியில் ஏலத்திற்கு வைத்திருந்தனர். காலை 6:30 மணிக்கு துவங்கி ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. இத்துடன் வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த 2000 நெல் மூட்டைகளும் சேதமானது.