இரவு நேரத்தில் மின் அழுத்த குறைபாடு: பொதுமக்கள் கடும் அவதி

தூத்துக்குடி அருகே எப்போதும் வென்றான் கிராமத்தில் இரவு நேரத்தில் மின் அழுத்தம் குறைந்து விடுவதால் பொதுமக்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். ;

Update: 2025-04-04 11:58 GMT
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எப்போதும் வென்றான் கிராமத்தில் விவசாயத்தை மட்டும் நம்பி சுமார் 2000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் 4 இடங்களில் மும்முனை டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தியது. டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு சில மாதங்கள் ஆனபோதும் இதுவரை மும்முனை மின்சாரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் ஏழு மணிக்கு பிறகு 10 மணி வரை கிராமம் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் ஆகி மின்விளக்குகள் அணைந்து விடுகிறது. வெளிச்சம் குறைந்து விடுகிறது. அல்லது விட்டு விட்டு எரிகிறது‌. கோடை வெப்பத்தின் தாக்கத்தில் மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் காற்றாடியும் நின்று விடுகிறது. அல்லது குறைவான வேகத்தில் சுற்றுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதோடு மட்டுமின்றி 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவ மாணவிகளும் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News