மதுக்கடைகளை மூட கோரிக்கை : மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
புனிதவெள்ளியன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி புன்னக்காயல் கிராமத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

புனிதவெள்ளியன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி புன்னக்காயல் கிராமத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் பாதிரியார் இல்லம் முன்பு நேற்று காலையில் ஊர் கமிட்டி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஊர்கமிட்டி தலைவர் குழந்தைமச்சாது தலைமை தாங்கினார். பங்கு தந்தை அந்தோணி சகாய டைட்டஸ் அடிகளார், துணை பங்கு தந்தை விவேக் சந்திரா அடிகளார், மற்றும் தூத்துக்குடி நெல்லை, குமரி மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் மதுவிலக்கு சபை இயக்குனர் ஜெயந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் வரும் புனித வெள்ளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும், தமிழகத்தில் படிப்படியாக மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், புனிதவெள்ளியன்று மதுக்கடைகளை மூடவேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதில், மீனவர்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டனர்.