போதை மீட்பு, மறுவாழ்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு
போதை மீட்பு மையங்கள், மறுவாழ்வு மையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் அவர்களைக் கையாளுதல் குறித்த வழிகாட்டுதல்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.;

இதுகுறித்து அதில் கூறியிருப்பதாவது, அதிக மது, போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை, அதில் இருந்து மீட்க, பாதிப்பின் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். முதலில், அவர்களுக்கு உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் போதை பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் உடனடி உளவியல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மறுவாழ்வு சிகிச்சைக்கு தகுதி பெறுவார். அதன்படி, மறுவாழ்வு மையங்களில் அவருக்கு உளவியல்ரீதியான சிகிச்சைகளும், மீட்பு சிகிச்சைகளும் வழங்கலாம். இத்தகைய சிகிச்சைகள் வழங்கும் மையங்களை ஒருங்கிணைந்த போதை மீட்பு மையங்கள், மறுவாழ்வு மையங்கள் என்று வகைப்படுத்தலாம். ஒருங்கிணைந்த மையங்களில் முதல் நிலை தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்களில் உளவியல் சார்ந்த மீட்பு சிகிச்சைகள் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த மையங்களில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியில் இருக்க வேண்டும். ஒரு உளவியல் ஆலோசகரும் பணியமர்த்தப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்களில் வாரம் ஒரு முறையாவது நோயாளிகளை மனநல மருத்துவர் பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோல், ஒரு எம்பிபிஎஸ் மருத்துவரும், செவிலியரும் தினமும் பணியில் இருக்க வேண்டும். நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். மறுவாழ்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் இருக்க வேண்டும். உடல்ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் நோயாளிகளை உள்ளாக்குவது குற்றம் ஆகும். முதல் நிலை தீவிர சிகிச்சை பெறாத எந்த நோயாளிகளையும் மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கக்கூடாது. அதேபோல், போதை மீட்பு மையங்களுக்கு தாமாக வர விரும்பாத நோயாளிகள், உடல் அளவில் மிகத் தீவிரமான பாதிப்பை அடையும்போது, அவர்களின் உறவினர்களின் ஒப்புதலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். அந்த தகவலை மனநல சிகிச்சை வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.