ஆட்டுக்காலில் நெளிந்த புழுக்கள் - கடைக்கு சீல்
வடமதுரை ரயில் நிலைய சாலையில் இறைச்சிக்கடையில் வாங்கிய ஆட்டுக்காலில் நெளிந்த புழுக்கள் - கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்;

வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக்குமார்(வயது 30), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மதியம் வடமதுரை ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் ஆட்டுக்கால்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றார். சமையலுக்காக ஆட்டுக்காலை வெட்டியபோது, அதில் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் இறைச்சிக்கடைக்கு சென்று கேட்டதற்கு இறைச்சிக் கடைக்காரர் முறையாக பதில் தராமல் அலட்சியமாக பேசியுள்ளார். இதனால் விரக்தியடைந்த கிருஷ்ணக்குமார் ஆட்டுக்காலுடன் வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். போலீசார் புகாரை பெற மறுத்து, உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமி சம்பந்தப்பட்ட இறைச்சி கடைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதில் பழைய இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இறைச்சிக்கடையை மூடி சீல் வைத்தார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு உறையினர் கூறியபோது, வடமதுரையில் சில இறைச்சிக்கடைகாரர்கள் இறந்த ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக லாபம் பெறும் நோக்கில் விற்பனை செய்கின்றனர். எனவே இறைச்சி வாங்கும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆட்டுக்காலில் புழுக்கள் நெளிந்த காட்சிகளின் வீடியோ அந்த பகுதியில் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.