பட்டாவை இணையத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி பெண்கள் போராட்டம்
அரூர் அருகே அரசு வழங்கிய பட்டா இடத்தை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் தர்ணா.;
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பையர்நாக்கன்பட்டி மோட்டூர் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கி உள்ள நிலையில், அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதை பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி வருவாய்த் துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் வருவாய்த் துறையினர் அலைக்கழித்து வருவதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க பெண்கள் வந்திருந்தனர். தொடர்ந்து கிராம நத்தத்திலிருந்து அதனை அரசின் கணக்கில் பதிவேற்றம் செய்ய செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பெண்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களை வருவாய்த் துறையினர் தொடர்ந்து செய்து கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாகவும், இதனால் தங்களால் எந்த அரசின் சலுகையும் பெற முடியாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு உடனடியாக கிராம நத்தத்திலிருந்து அரசின் கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக, அரசு கணக்கில் பதிவேற்றம் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால், பெண்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.