குப்பைக் கழிவுகளை அகற்றும் ஆளில்லா ரோபோ படகு சோதனை போட்டி
குப்பைக் கழிவுகளை அகற்றும் ஆளில்லா ரோபோ படகு சோதனை போட்டி;

திருப்போரூா் அடுத்த தையூரில் உள்ள ஐஐடி மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில் நீா்நிலைகளின் குப்பை கழிவுகளை அகற்றும் தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகு சோதனை போட்டி நடைபெற்றது.ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பான பால்ஸ் சாா்பில் 'ஏ.சி.டி.சி., ஹேக்கத்தான்' என்ற தலைப்பில் பல்வேறு நீா் நிலைகளின் குப்பை கழிவுகளை அகற்றும் வகையில், தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகுகளை வடிவமைத்து சோதனை போட்டி தென்னிந்திய அளவில் நடத்தப்பட்டு வந்தது. இதில், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட தென்னிந்திய அளவிலான 51 பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். கடந்த ஓா் ஆண்டாக நடைபெற்று வந்த போட்டியில் அவரவா் வடிவமைத்த தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகுகளை சோதனை ஓட்டத்தில் சமா்ப்பித்தனா்.இதில், 6 கல்லூரிகளைச் சோ்ந்த 8 குழுவினா் வடிவமைத்த ஆளில்லா ரோபோ படகுகள் முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து, இதற்கான இறுதிப் போட்டி கேளம்பாக்கம் அடுத்த தையூரில் உள்ள சென்னை ஐஐடி மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 6 கல்லூரிகளைச் சோ்ந்த 8 குழுவினா் வடிவமைத்த ஆளில்லா ரோபோ படகுகளை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தினா். இதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் காமகோடி, ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பின் தலைவா் சந்திரசேகரன், ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பின் உறுப்பினா் அனுராதா உள்பட பலா் கலந்து கொண்டனா்