சென்னை: கள்ளச் சாவியை பயன்படுத்தி இரு சக்கர வாகனங்களை திருடிய சிறுவன் கைது
கள்ளச்சாவியை பயன்படுத்தி 2 ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களை திருடி வெளி மாநிலங்களுக்கு விற்ற சிறுவனை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் இளைஞரை தேடி வருகின்றனர்.;

சென்னை பெரியமேடு ஸ்டிங்கர்ஸ் முதலாவது தெருவை சேர்ந்தவர் மெர்லின் (25). அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி இரவு பெரியமேடு சுப்பையா தெரு மாதா கோயில் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் மெர்லின் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது, ஓட்டேரியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் சமோசா கடையில் வேலை பார்த்து வந்த சிறுவனை போலீஸார் கைது செய்தனர். ஜமாலியா ஈதர் கார்டன் தெருவை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் கவியரசன் (20) என்பவருடன் 17 வயது சிறுவனும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கள்ளச் சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும், திருடிய வாகனங்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் கவியரசனை போலீஸார் தேடி வருகின்றனர்.