இளையான்குடி அருகே இளைஞர் வெட்டி படுகொலை
இளையான்குடி அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை;
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அமைந்துள்ளது வேலடிமடை கிராமம். இங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் (வயது 28) மற்றும் கீழ தூவல் எம்ஜிஆர் நகரை சேர்ந்த நவீன் (வயது 20) ஆகிய இருவரும் அறுவடை இயந்திரத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று இரவு வேலை முடிந்து, பேருந்து நிறுத்தத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவரையும் வெட்டினர். இந்தக் கொடூர தாக்குதலில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் பலத்த காயங்களுடன் கிராமத்துக்குள் ஓடி, அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரைந்து வந்த கிராம மக்கள், மகேஷின் உடலை ரத்த வெள்ளத்தில் கண்டதுடன், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இளையான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்ப வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.