கோடைக்காலத்தை முன்னிட்டு முதியோர் இல்லங்களுக்கு மோர், பழம்
தர்ம அறக்கட்டளை சார்பில் நடந்த ஆலோசனை குழு கூட்டத்தில் தீர்மானம்;
நாகை மாவட்டம் நாகூர் பாத்திமா பள்ளி வளாகத்தில், நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை சார்பில் ஆலோசனைக் குழு கூட்டம், நாகை மாவட்ட வாசகர் வட்ட தலைவர் கவிஞர் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் நாகூர் சித்திக், நா.பாலமுரளி, செயலாளர் மு.மஹமது மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகூர்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நல சங்க தலைவரும், அறக்கட்டளை ஆலோசகருமான நாகை எஸ்.மோகன், டிரஸ்டி நாகூர் வீ.எஸ்.எ.தஸ்லீம், ஏ,முஹம்மது இத்ரீஸ் மரைக்காயர், ந,ராமசாமி, ஏ,முஹம்மது தம்பி, ரோஹித், ஹபீப் முஹம்மது மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வருகிற கல்வியாண்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவ, மாணவிகளுக்கு, கல்வி கட்டணம் செலுத்துவது, கோடைக்காலத்தை முன்னிட்டு, முதியோர் இல்லங்களுக்கு சென்று, மோர் மற்றும் பழங்கள் வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அறக்கட்டளையின் வரவு- செலவு வாசிக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.