சேலத்தில் நடந்து சென்ற வாலிபரிடம் கத்தியை காட்டி வழிப்பறி
3 பேரை போலீசார் கைது செய்தனர்;

சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் ஹரிஸ் (வயது 23). இவர் நேற்று எருமாபாளையம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து, கத்தியை காண்பித்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.7,200 பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ஹரிஸ் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பஞ்சந்தாங்கி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜய் (26), யோகேந்திரன் (24), மற்றும் அஜித் (27) என்பதும், இவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஹரிசிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.