நள்ளிரவில் கோழி பண்ணையில் தீ விபத்து
கோபிசெட்டிபாளையம் அருகே நள்ளிரவில் கோழிபண்ணையில் பயங்கர தீ விபத்து 3,480 கோழி குஞ்சுகள் தீயில் கருகி இறந்தது;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (47). இவர் அதே பகுதியில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தகரம் ஓலையால் வேயப்பட்ட கோழிப்பண்ணை செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 3,480 கோழிக்குஞ்சுகள் நேற்று இரவு தான் விடப்பட்டிருந்தன. இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தகரம் ஓலையால் வேயப்பட்ட மூன்று கோழி பண்ணை செட்டுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்து நடந்ததும் இதுகுறித்து பண்ணையில் வேலை பார்க்கும் பணியாட்கள் கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் லாரியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நள்ளிரவு 2 மணி வரை போராடி கோழி பண்ணையில் உள்ள தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர் இந்த தீ விபத்தில் 3,480 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. 30 மூட்டை தீவனங்கள், பண்ணை உபகரணங்கள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேற்படி சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிய வருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.