ராமநாதபுரம் அரசுப் பேருந்து அழுதாகி நின்றதால் வழியில் பொதுமக்கள் அவதி
சாயல்குடியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு.. பயணிகளே இறங்கி பஸ்சை தள்ளிவிட்ட அவலம்..;
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் சாயல்குடி பேரூராட்சி நகர் பகுதிக்குள் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து விளாத்திகுளம் வழியாக தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து சாயல்குடி நகர் பகுதியில் பஜார் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டது. இதன் பின் அங்கிருந்து பேருந்து நிலையத்துக்கு கிளம்பிய போது மும்முனை சந்திப்பில் பழுதாகி பாதியில் நின்று விட்டது. இதனால் ராமேஸ்வரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அருப்புக்கோட்டை - மதுரை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள் இருபுறங்களிலும் தேங்கி நிற்கத் தொடங்கி விட்டன. இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதை தொடர்ந்து பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் கீழே இறங்கி அரசு பேருந்தை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்து பின்னர் அங்கிருந்து பேருந்து இயக்கப்பட்டது. சமீப காலமாக சரிவர பராமரிக்காத அரசு பேருந்துகள் நடுவழியில் பழுதாகி பேருந்தில் வரும் பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் முறையாக பேருந்துகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.