சேலத்தில் மிளகு லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு;
தர்மபுரி அடுத்த நாட்றம்பள்ளியில் இருந்து மிளகு லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று சேலம் நோக்கி வந்தது. ேநற்று அதிகாலை 4 மணியளவில் மாமாங்கம் சர்வீஸ் ரோட்டில் வந்தபோது, மழை பெய்ததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களும் சாலையில் அணிவகுத்து நீண்ட தொலைவில் நின்றது. தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் லாரியில் இருந்து விழுந்து கிடந்த மிளகு மூட்டைகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியும் மீட்கப்பட்டன. மேம்பால பணி நடப்பதால் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. நேற்று காலை அவ்வழியாக சென்ற தனியார் கல்லூரி பஸ்சின் முன்பக்க டயர் சேற்றில் புதைந்தது. டிரைவர் கடுமையாக போராடியும் பஸ்சை மீட்க முடியவில்லை. போக்குவரத்து போலீசார் அங்கு வந்து அந்த பஸ்சை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.