சேலம் சிவதாபுரம் பகுதியில் திறந்தவெளி கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அமைக்க
கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு;
சேலம் சிவதாபுரம் மெய்யந்தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள 2 திறந்தவெளி கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தி கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட சிவதாபுரம் மெய்யந்தெருவில் சாலையோரம் அடுத்தடுத்து 2 கிணறுகள் உள்ளன. 50 அடி ஆழம் கொண்ட இந்த கிணறுகள் தற்போது பெய்த கனமழையால் அதன் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வெளியே ஓடுகிறது. இதனால் கிணறுகள் ஓரம் இருக்கும் தார்சாலையும் கிணற்றில் சரிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிணற்றுக்குள் 7 அடி அகலத்திற்கு உள்புறம் பெயர்ந்து விழுந்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் அச்சப்படுகிறார்கள். இந்த பகுதி அதிக போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டால் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 திறந்தவெளி கிணறுகளின் அருகில் தடுப்பு சுவர் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.