நீடாமங்கலத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு உரத் தயாரிப்பு பயிற்சி

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பில் பயிற்சி பெற்ற வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் இயற்கை உர படுக்கை அமைத்து அசத்தல்;

Update: 2025-06-04 08:36 GMT
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூர் ஆர்.வி.எஸ்.வேளாண்மைக் கல்லூரிகளைச் சேர்ந்த 57 மாணவ, மாணவியர்கள் நீடாமங்கலத்தில் உள்ள கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் குறுங்காடு, மாடித்தோட்டம், கோவில் நந்தவனங்களில் 5 நாள் பயிற்சி பெற்றனர். கிரீன் நீடா குறுங்காட்டில் உதிர்ந்து கிடந்த காய்ந்த இலைகளை முதலில் சேகரித்து பத்து அடி நீளத்திற்கு படுக்கை அமைத்தனர். பின்பு அதன் மீது காய்ந்த மரக்குச்சிகளை பரப்பி வைத்தனர். மூன்றாவது அடுக்காக பசும் தளைகளை பரப்பி வைத்து அதன் மீது மண் தூவி, சாணிப்பால் தெளித்து இயற்கை உர படுக்கையை அமைத்தனர். இயற்கை உர படுக்கையை அமைத்த மாணவர்களிடம் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு பேசுகையில், இயற்கை உர படுக்கை என்பது, விவசாய கழிவுகளை பயன்படுத்தி மண்புழுக்களின் உதவியுடன் உரம் தயாரிக்கும் ஒரு முறையாகும். மண்புழுக்கள் விவசாய கழிவுகளை உட்கொண்டு, அவற்றை உரமாக்கி வெளியேற்றுகின்றன. இயற்கை உர படுக்கையால் மண்புழு உரம், மண்ணின் துகள்களை ஒன்றிணைத்து, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. மண்புழு உரத்தால், பயிர்களின் வேர் வளர்ச்சி, பூக்கும் திறன், பழம் விளைச்சல் போன்றவை மேம்படுகின்றன. செயற்கை உரங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை உரம், தாவரங்களுக்குத் தேவையான அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது என்றார். பயிற்சியின் நிறைவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கிரீன் நீடா குறுங்காட்டில் நடைபெற்றது. சான்றிதழ்களை கிரீன் நீடா திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எஸ்.முகமது ரபீக், மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி கணிணி ஆசிரியர் எஸ்.ஹரிகிருஷ்ணன், மன்னார்குடி இராஜ கோபாலசாமி கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் ப.பிரபாகரன் ஆகியோர் வழங்கினர். மாடித்தோட்டப் பயிற்சியை கிரீன் நீடா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே ஜானகிராமன் அளித்து பேசுகையில், இயற்கை விவசாயத்தை தொடங்குவதற்கு முதற்படியாக மாடித்தோட்டம் விளங்குகிறது. மாடித்தோட்டம் அமைத்து பராமரிப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்து உண்பதால் ஆரோக்கியமான உடல் நலத்தை பெற முடிகிறது என்றார். விழாவில் கிரீன் நீடா மாணவர் பிரிவு அமைப்பாளர் ஜி.சுபாஷ், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி சண்முகப்பிரியா நன்றி கூறினார்.

Similar News