நாகர்கோவிலில் அருகே வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (40). இவர் பெங்களூரில் வேலை செய்து வந்தார். தற்போது அதே பகுதியில் ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் ஒரு கூடாரம் அமைத்திருந்தார். ஆனால் யாரோ சிலர் அந்த கூடாரத்தை அகற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகராஜன் நேற்று மாலை 5 மணி அளவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள 140 அடி உயர உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி உச்சிக்கு சென்று கூடாரத்தை எடுத்து அகற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். உடனடியாக அப்பகுதியினர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நாகராஜனிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமரசம் பேசியதை அடுத்து நாகராஜன் கீழே இறங்கி வந்தார். இதையடுத்து இன்று கோட்டாறு காவல் நிலையத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.