மழையில் நனைந்த நெல் மூட்டைகள் கவனிக்காததால் முளை விட்டு அவலம்

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து உள்ளதால், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2025-06-08 12:40 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், பெருநகர் கிராமத்திற்கு உட்பட்ட, அகஸ்தியப்பா நகர், எம்.ஜி.ஆர்., நகர், சேத்துப்பட்டு, மேட்டூர், பெருநகர் ஆகிய துணை கிராமங்களில், 1,000 ஏக்கர் நவரை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த நெல்லை, ஒரு மாதத்திற்கு முன், அப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்தனர். அறுவடை செய்த நெல்லை பெருநகரில் இயங்கும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். அதேபோல, இந்த கொள்முதல் நிலையத்தில் இளநகர், மானாம்பதி கண்டிகை ஆகிய கிராமங்களில் இருந்தும், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்தனர். தற்போது, கொள்முதல் செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான 3,000 நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கொண்டு செல்லாமல் அங்கேயே அடுக்கி வைத்திருந்தனர். இங்குள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கூரை இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால், கடந்த வாரம் பெய்த மழையினால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்து முளைப்பு விட்டுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து உள்ளதால், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, லாரிகள் வாயிலாக மாவட்ட சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News