போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் சாலையோர பதாகைகள்

வாலாஜாபாத்தில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்;

Update: 2025-06-13 10:39 GMT
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் உள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், வாலாஜாபாத் நகரை மையமாக கொண்டு தினசரி வாலாஜாபாத் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வாலாஜாபாத் ராஜவீதி சாலையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு, காலை முதல், இரவு வரை ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், வாலாஜாபாத் ராஜவீதியில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பலர், தங்களது எல்லையை நீட்டித்து, விற்பனை செய்யும் பொருட்களை சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்கின்றனர். மேலும், பழக்கடை, மளிகை கடை, துணிக்கடை மற்றும் உணவகம், டீக்கடை உள்ளிட்ட கடை வியாபாரிகள், தங்கள் கடை இருப்பு குறித்த விளம்பர பதாகைகளை சாலையோரத்தில், வைத்துள்ளனர். இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் ஒதுங்க வழி இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தம் செய்ய இடமின்றி, கடையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, வாலாஜாபாத்தில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News