அரக்கோணம்: பெண் பயணியிடம் திருடிய வாலிபர் கைது
பெண் பயணியிடம் திருடிய வாலிபர் கைது;
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹேமா (வயது 50). இவர் கடந்த 7-ம் தேதி பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். ரெயில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வந்த போது ஹேமா தனது இருக்கையில் கைப்பையை வைத்து விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது கைப்பையில் இருந்த ரூ.12 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஹேமா அரக்கோணம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2-வது நடைமேடையில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டை சேர்ந்த அர்பஷ்கான் (வயது 29) என்பதும், ஹேமா வைத்திருந்த கைப்பையில் இருந்து ரூ.12 ஆயிரம் திருடியதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அர்பஷ்கானை போலீசார் கைது செய்தனர்.