உயிர் காக்கும் பழுது நீக்கல் சிகிச்சைகள்
மதுரையில் உயிர் காக்கும் பழுது நீக்கல் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் பேட்டி அளித்தனர்.;
தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை என புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,இதய சிகிச்சைகளில் ஒன்றான இதயத்தின் வால்வுகள் மற்றும் சுவர்கள் போன்ற கட்டமைப்பை பாதிக்கும் நிலைமைகளுக்கு, குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சைகளின் வழியாக சிகிச்சையளிப்பதில் மேம்பட்ட நிபுணத்துவத்தை கொண்டிருக்கிறது. அதிக ஆபத்துள்ள இதய நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றவும், இதயம் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் இயக்கத்தை மீட்டெடுக்கவும் இம்மருத்துவமனையின் உயர் உட்கட்டமைப்பு வசதிகளும், மருத்துவர்கள் குழுவின் அனுபவமிக்க செயல்திறனும், நிபுணத்துவமும் உதவியுள்ளது. சமீபத்தில், 70 வயதான ஒரு முதியவருக்கு கிழிந்த பெருந்தமனி விரிவாக்கப் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க, TEVAR என அழைக்கப்படும் சிகிச்சையை இம்மருத்துவமனை வெற்றிகரமாக செய்திருக்கிறது; இதய கீழறைகளில் பிரச்சனை ஏற்பட்டிருந்த 68 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு கடுமையாக குறுகி இருந்த வால்வை மாற்றுவதற்கு கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சையளித்தது. TAVR, என அழைக்கப்படும்,அறுவைசிகிச்சை அல்லாத ஒரு மருத்துவச் செயல்முறையில் 41 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு திறந்தநிலை இதய அறுவைசிகிச்சைக்கான அவசியத்தை தவிர்த்து TEER என்பதனையும் இம்மருத்துவமனை வெற்றிகரமாக செய்து குணப்படுத்தியிருக்கிறது. கட்டமைப்பு சார்ந்த இதய இண்டர்வென்ஷனல் சிகிச்சைகள் (Structural Interventions) வருவதற்கு முன்பு, அறுவை சிகிச்சை நிபுணர்கள் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்து, இதயத்தை நிறுத்தி, வால்வுகள் அல்லது சுவர்களை சரிசெய்யவும், மாற்றவும் Heart- Lung மெஷினை பயன்படுத்த வேண்டியிருந்தது. இன்று, அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேம்பட்ட இமேஜிங் மற்றும் சிறிய கருவிகளைப் பயன்படுத்தி இரத்த நாளங்கள் மூலம் இதயப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கன்றனர். இந்த சிகிச்சைகள், வயதான, அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்குகின்றன. தென் தமிழ்நாட்டில் ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே மூன்று மேம்பட்ட இதய கட்டமைப்பு சார்ந்த சிகிச்சைகளான (Structural Interventions) TEVAR, TAVR, மற்றும் TEER ஆகிய அனைத்தையும் மேற்கொள்ளும் நிபுணத்துவத்தைப் பெற்றுள்ளன. அத்தகைய உயர் நிபுணத்துவத்தைக் கொண்டு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுள் ஒன்றாக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இதய சிகிச்சையில் இந்தியாவிலேயே முற்றிலும் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு மிட்ரல் வால்வு கிளிப் பயன்படுத்தப்பட்டிருப்பது சென்னை தவிர, தமிழ்நாட்டில் இதுவே முதன்முறையாகும். அதிக இடர்வாய்ப்புள்ள மேற்கண்ட இதய சிகிச்சை செயல்முறைகள், மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதயவியல் துறையைச் சேர்ந்த பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்டன. இக்குழுவில் அனுபவம் வாய்ந்த இதயசிகிச்சை மருத்துவர்கள் மற்றும் இதயத்திற்கான மயக்க மருந்தியல் நிபுணர்கள் இடம் பெற்றுள்ளர். இக்குழுவில் இத்துறையின் தலைவர் மற்றும் கட்டமைப்பு சார்ந்த சிகிச்சைகள் பிரிவின் இயக்குநருமான டாக்டர். R. சிவகுமார்; இதய இண்டர்வென்ஷனல் சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர். S. செல்வமணி; அகாடமி பிரிவின் இயக்குநர் டாக்டர். N. கணேசன்; மரபு வழி கோளாறுகளுக்கான சிகிச்சை நிபுணர் டாக்டர். M. சம்பத் குமார், எலக்ட்ரோபிசியாலஜி பிரிவுத் தலைவர் டாக்டர். ஜெயபாண்டியன்; இதய இண்டர்வென்ஷனல் சிகிச்சை பிரிவின் இணை நிபுணர் டாக்டர். தாமஸ் சேவியர்; மற்றும் இதய மயக்கவியல் துறையின் முதன்மை நிபுணர் டாக்டர். எஸ். குமார், இதய மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர்டாக்டர். R.M கிருஷ்ணன், இதய மற்றும் இரத்தநாள அறுவைசிகிச்சை துறையின் முதுநிலைநிபுணர் டாக்டர். ராஜன், இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறையின், நிபுணர் டாக்டர். பிரபு குமரப்பன் சிதம்பரம் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவர் மற்றும் கட்டமைப்பு இண்டர்வென்ஷனல் சிகிச்சைகள் (Structural Interventions) பிரிவின் இயக்குநர் டாக்டர். R. சிவகுமார் இச்சந்திப்பு நிகழ்வில் கூறியதாவது: "இதயவியலில், கட்டமைப்பு ரீதியிலான இண்டர்வென்ஷனல் சிகிச்சைகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த நவீன சிகிச்சைகள் இதய சிகிச்சையின் எதிர்காலத்தை பிரதிபலிக்கின்றன; குறைந்தபட்ச இடர்வாய்ப்புடன், விரைவாக குணமடையும் உயிர் காக்கும் தீர்வுகளை வழங்குகின்றன. குறிப்பாக திறந்த இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்வதில் அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு இந்த இண்டர்வென்ஷனல் மருத்துவச் செயல்முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இந்த அதிநவீன செயல்முறைகளை வழங்க அர்ப்பணிப்பும், அனுபவமும், திறமையும் கொண்ட மருத்துவர்கள் குழு இயங்கி வருகிறது; அத்துடன் இத்தகைய நவீன உயர்சிகிச்சைகளுக்கு தேவையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இங்கு நிறுவப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில் மேலே குறிப்பிடப்பட்ட சிகிச்சை நேர்வுகளின் வெற்றி, அதிக ஆபத்தான நிலையிலுள்ள இதய நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றவும், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை பராமரிப்பை மதுரையிலேயே வழங்குவதில் எமது திறனையும், அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகின்றன.” மேலே குறிப்பிடப்பட்ட நோயாளிகள் குறித்த கூடுதல் தகவல்களை அளித்த டாக்டர். சிவகுமார் கூறியதாவது: “70 வயதான முதியவர், அவரது மார்பில் உள்ள முக்கிய தமனியில் உயிருக்கு ஆபத்தான வீக்கத்தால் (மார்புப் பெருந்தமனி விரிவாக்கம்) அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இதய அதிர்ச்சி பாதிப்பு ஏற்பட்டிருந்தது; போதுமான அளவு இரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்து அனுப்ப முடியாத ஒரு ஆபத்தான நிலை இது. அவருக்கு செய்யப்பட்ட ஒரு CT அயோர்டோகிராம் பரிசோதனையில், இரத்தநாள விரிவாக்கம் உணவுக்குழாய்க்குள் கிழிந்து சிதைவடைந்து உடல் நிலையை மிகவும் மிகவும் மோசமாக்கியிருப்பதைக் காட்டியது. எனவே, காலில் ஒரு சிறிய துளையின் வழியாக சேதமடைந்த தமனிக்குள் ஒரு ஸ்டென்ட்-ஐ பொருத்துகிற TEVAR அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதை செய்து முடித்தவுடன் உடனடியாக கிழிசல் அடைக்கப்பட்டு இரத்தக் கசிவு நிறுத்தப்பட்டது. இதனால் விரைவாக அந்நோயாளி குணமடைவதற்கு இது வழிவகுத்தது. நோயாளியின் இரத்த அழுத்தமும், சிறுநீரக செயல்பாடும் கணிசமாக மேம்பட்டது. தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டுமென்ற அறிவுறுத்தல்களுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இம்முதியவர் தற்போது தொடர் கண்காணிப்பின் கீழ் நலமாக இருக்கிறார்.” TAVR சிகிச்சை உத்தி குறித்து டாக்டர் சிவகுமார் கூறியதாவது: “68 வயதான ஒரு முதியவருக்கு பெருநாடி வால்வு சுருக்கம் கடுமையானதாக இருந்தது. அடைப்பின் காரணமாக இதய செயலிழப்பு நிலையோடு அவர் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தின் இரு கீழறைகளும் சரியாக செயல்படாத நிலை, இரத்தத்தை வெளியேற்றும் இதயத்தின் திறன் குறைவு (வெளியேற்றும் அளவு 35%), சிறுநீரக செயலிழப்பு (AKI), வயிற்றில் நீர் கோர்த்தல் மற்றும் நுரையீரலில் அதிக இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் இருந்தன. பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் நிலைப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவக் குழுவினர் இந்நோயாளிக்கு TAVR செயல்முறையை மேற்கொண்டனர். தொடையின் ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்பட்ட இச்சிகிச்சையில், நோயால் பாதிப்படைந்திருந்த வால்வு மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட புதிய வால்வு செயல்படத் தொடங்கியதும், நோயாளியின் இதயம் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளில் விரைவான முன்னேற்றம் காணப்பட்டது. அவரது கல்லீரல் செயல்பாடும் சீராகத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அவர் சீரான உடல்நிலையோடு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார்.” TEER சிகிச்சை குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதய இண்டர்வென்ஷனல் சிகிச்சை பிரிவின் இயக்குநர் டாக்டர் செல்வமணி கூறியதாவது:TEER சிகிச்சையை 41 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு நாங்கள் செய்தோம். அவருக்கு கரோனரி தமனி நோயும் (CAD), ஏற்கனவே ஆஞ்சியோபிளாஸ்டி செய்த வரலாறும் இருந்தது. வழக்கமான பரிசோதனையின் போது, அவருக்கு இரத்த ஓட்டகுறைவின் காரணமாக விரிவடைந்த இதயத்தசை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் இதயத்தின் நான்கு அறைகளும் பெரிதாக விரிவடைந்து இருந்தன; மேலும் கடுமையான மிட்ரல் வால்வு பாதிப்பும் (MR) இருந்தது. மிட்ரல் வால்வு சரியாக மூடப்படாததால் இரத்தம் பின்னோக்கி பாயும் நிலை இது. இதனால் அவருக்கு அடிக்கடி இதய செயலிழப்பு ஏற்பட்டது.இந்தப் பிரச்சனையை சரிசெய்ய, மருத்துவக் குழுவினர் TEER சிகிச்சையை இவருக்கு மேற்கொண்டனர். ஒரு கதீட்டர் வழியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வால்வு கிளிப் இதயத்திற்குள் செலுத்தப்பட்டு, மிட்ரல் வால்வுடன் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக இரத்தக் கசிவு கணிசமாக குறைக்கப்பட்டது. மருத்துவ ரீதியாக இந்நோயாளி சிறப்பாக குணமடைந்திருக்கிறார்.” இம்மருத்துவமனையின் திரு. திலீப் பெர்னார்ட் இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் உடனிருந்தார்.