போக்குவரத்திற்கு லாய்க்கற்ற வகையில் உள்ள பாலக்குறிச்சி- இறையான்குடி பிரதான சாலையை

சீரமைக்க வலியுறுத்தி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்பு போராட்டம்;

Update: 2025-06-19 07:32 GMT
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்குறிச்சியில் இருந்து, இறையான்குடி வரை செல்லும் பிரதான சாலை போக்குவரத்திற்கு லாய்க்கற்ற வகையில் சேதமடைந்துள்ளது. இதனால், தினசரி கூலி வேலை மற்றும் கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது தொடர்பாக, பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராம மக்கள் இறையான்குடி ஊராட்சி அலுவலகம் அருகில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்குகிளை செயலாளர் எஸ்.ரஜினிகாந்த் தலைமை வசித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட குழு உறுப்பின என்.பன்னீர்செல்வம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) உதவி பொறியாளர் அருண்குமார், வலிவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், பாலக்குறிஞ்சி - இறையான்குடி 3.800 கிமீ தூரமுடைய சாலையை மேம்பாடு செய்ய ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டு பணி ஆணை வழங்கும் தருவாயில் உள்ளதால், இந்த மாத இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தில், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.முருகையன், இறையான்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.சீனிவாசன், கிளை உறுப்பினர்கள் ஐ.ரத்தினசாமி, எம்.ராமையன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News