செந்துறை வருவாய் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தொடக்கம்

செந்துறை வருவாய் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தொடங்கப்பட்டது.;

Update: 2025-06-26 06:01 GMT
அரியலூர், ஜூன் 26- அரியலூர் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய உங்களைத் தேடி உங்கல் ஊரில் திட்ட முகாமில், பல்வேறு துறைகளில் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பொ.ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டார்.செந்துறை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்ட அவர், உறுப்பினர்களின் எண்ணிக்கை, இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விபரங்கள், வைப்புத் தொகை விபரம் ஆகியவற்றை கேட்டறிந்து, கோப்புகளை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு இடுப்பொருள்கள்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.தொடர்ந்து, இரும்புலிக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், நியாய விலைக் கடை ஆகியவற்றை கள ஆய்வு மேற்கொண்ட அவர், பொய்யாதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, கட்டுமானப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 128 மனுக்களை பெற்றார். இந்த நிகழ்வுகளில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். : .

Similar News