நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட டிடிவி தினகரன் வலியுறுத்தல்

நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே, நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2025-06-28 14:59 GMT
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு முழுவதும் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவுக்கு ஏற்ப வரி விதிக்கும் முறையை செயல்படுத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் மத்திய நீர்வளத்துறையின் அறிவிப்புக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.திமுக அரசின் கூட்டணி தர்மத்தால் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலையில், மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தடி நீரின் அருமையையும், அவசியத்தையும் மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயியும் நன்றாக அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தி வரும் நிலையில், நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல. ஏற்கெனவே, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து இன்னல்களை சமாளிக்க முடியாமல் தமிழக விவசாயிகள் தவித்து வரும் நிலையில், தற்போது நிலத்தடி நீருக்கும் வரி என்பது அவர்களை விவசாயத்தை விட்டே வெளியேற்றக் கூடிய ஆபத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உணவு உற்பத்தி எனும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய நீர்வளத்துறையை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News