சேலம் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் திறப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ராகேஸ் எஸ். சேகர் திறந்து வைத்தார்;
சேலம் இரும்பாலை சாலை பகுதியில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் உள்ளது. இதன் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் ஆகியவை உள்ளன. மேலும் தளவாய்பட்டி ஊராட்சி பகுதியும் இதன் அருகில் உள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் அங்கு உள்ள அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பஸ் நிறுத்தம் அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகில் வருங்கால வைப்பு நிதி அலுவலக பஸ் நிறுத்தம் என பெயரிட்டு போக்குவரத்து துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து புதிய பஸ் நிறுத்தத்தின் திறப்பு விழா நடந்தது. இதற்கு தளவாய்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ராகேஸ் எஸ். சேகர் ரிப்பன் வெட்டி புதிய பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.