நாய் கடித்து ஆடுகள் பலி
நம்பியூர் அருகே அடுத்தடுத்து நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் பலி;
ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக நாய்கள் கடித்து ஆடுகள் உயிர் இழப்பும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உரிமையாளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நம்பியூர் அருகே அடுத்தடுத்து 11 ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது நம்பியூர். இங்குள்ள கொளத்துப்பாளையம் பழையூரை சேர்ந்தவர் சுப்ரமணி.இவரது ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற போது அங்கிருந்த நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பரிதாபமாக இறந்தன, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது 2 ஆடுகள், வடுக பாளையத்தை சேர்ந்த கார்த்திக் குமார் என்பவரது 2 ஆடுகள், புது பாளையத்தைச் சேர்ந்த கருப்பண்ணனுக்கு சொந்தமான 3 ஆடுகள் என அடுத்தடுத்து 11 ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்றது. மேலும் நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அய்யம்பாளையத்தில் இதேபோன்று நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியான நிலையில் நேற்று 11 ஆடுகள் பலியானது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,அஞ்சனூர் அருகே உள்ள மின்னகாட்டு பாளையத்தில் கறியை வெட்டி பேக்கிங் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து வீசப்படும் எலும்புகளை தின்று பழகிய 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று கால்நடைகளை கொன்று வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.