முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வேல்முருகன்
தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பேட்டி;
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் வீட்டிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அஜித்குமார் காவல் விசாரணை மரணத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், தமிழக முதல்வர், அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். அஜித்குமார் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. முதல் முறையாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர். விசாரணைக்கு உரிய சட்டவழிகள் இருக்கும்போதும், அவரை மனிதநேயமற்ற முறையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இனிமேல் தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள், விசாரணை கைதி மரணங்கள் நடைபெறாத வகையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதை வரவேற்கிறோம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதும் சாதகமானது. ஆனால், இது ஆண்டு கணக்கில் தொங்க வேண்டாம். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி தண்டிக்கப்பட்டது போலவே, இவ்வழக்கிலும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்று உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்