உளுந்துார்பேட்டை அடுத்த உ.செல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்மந்தம் மகன் சக்திவேல், 27; அதே பகுதியைச் சேர்ந்த அரசன் மகன் மோகன், 25; இருவருக்கும் பக்கத்து பக்கத்து விவசாய நிலம் உள்ளது. நிலம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த நேற்று முன்தினம் மோகன் உளுந்துார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உ.நெமிலி அருகே நின்ற போது, அவ்வழியாக சென்ற சக்திவேல், மோகனை கேலி செய்துள்ளார். இது குறித்து மோகன் வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் கூறினார். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். காயமடைந்த சக்திவேல், மோகன் இருவரும் நேற்று முன்தினம் இரவு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரவு 11:30 மணிக்கு, சக்திவேல், மோகனை காண வந்த இரு தரப்பினரும், அரசு மருத்துவமனைக்கு உள்ளே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து மருத்துவமனை போலீசார் பிரச்சினையில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர்.