திமுக ஜாதி அடிப்படையில் செல்கிறது - மேயர்
திமுக ஜாதி அடிப்படையில் செல்வதாக காரைக்குடி மேயர் அதிருப்தி;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் முத்துதுரை தலைமையில், ஆணையாளர் சங்கரன் முன்னிலையில் நடைபெற்றது. சுயேச்சை உறுப்பினர் மெய்யர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுத்த வழக்கில் நீதி மன்ற உத்தரவு காரணமாக மேயர் முன் அனுமதி பெற்று விடப்பட்ட ஒப்பந்த பணிகளுக்கான மன்றத்தின் அனுமதி தீர்மானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. மொத்தம் உள்ள 36 வார்டு மாமன்ற உறுப்பினர்களில் துணை மேயர் உட்பட 21 மாமன்ற உறுப்பினர்கள் திமுக மேயர் முத்துதுரை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. மேலும் திமுகவை சேர்ந்த 13 மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர். திமுகவை சேர்ந்த 9 உறுப்பினர்கள் அதிமுக - 7 காங்- 3 கம்யூ-1 சுயே - 1 என 21 மாமன்ற உறுப்பினர்கள் திமுக மேயர் முத்துதுரை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் திமுக மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 36 வார்டுகளில் 1 வார்டு மதிமுக உறுப்பினர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ஹரிதாஸ் பேசும்போது கடந்த ஒன்றை ஆண்டுகளாக மக்களுக்கான திட்டங்கள் சரிவர செய்யவில்லை எனவே அனைத்து கவுன்சிலர்களையும் ஒருங்கிணைத்து நல்ல முறையில் மக்களுக்கான திட்டங்களை செய்ய வேண்டும் என பேசினார். அப்போது குறுகிட்டு பேசிய மேயர் முத்துதுரை திமுக ஜாதி அரசியல் பாதையில் செல்கிறது என்று கூட்டத்தில் பகிரங்கமாக பேசி கண்டனத்தை பதிவு செய்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி திமுக மேயருக்கு எதிராக திமுக துணை மேயர் உள்ளிட்ட திமுக கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது