சாலை நடுவே உள்ள பேரிகேடால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஒரகடத்தில் மேம்பால பணிகள் முடிந்தும், அகற்றப்படாமல் சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகேடால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்;

Update: 2025-07-20 15:05 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக, மேம்பாலம் கட்டுமான பணிக்காக சாலையில் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டதால், அகலம் மேலும் குறைந்தது. இதனால், வாலாஜாபாத் மார்க்கமாக இருந்து வரும் லாரி, கன்டெய்னர் வாகனங்கள் படப்பை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டன. இதற்காக, ஒரகடம் மேம்பாலம் அருகே, பேரிகேட் அமைக்கப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில், கடந்த ஜூன் 6ம் தேதி, படப்பை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்த நிலையில், ஒரடகம் மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட பேரிகேட் அகற்றப்படாமல் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள், அவ்வப்போது பேரிகேட் மீது மோதி, சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சாலை நடுவே உள்ள பேரிகேட்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News