ஓராண்டாக மந்தமாக நடந்து வரும் புத்தகரம் கோவில் தேர் திருப்பணி
புத்தகரத்தில், முத்து கொளக்கியம்மன் கோவில் தேர்த் திருப்பணி மந்தமாக நடப்பதால் விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆடி மாதத்தில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில், தேர் பழுது காரணமாக, 40 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம் இல்லாமல் ஆடி மாத விழா நடைபெறுகிறது. இதனால், இக்கோவிலுக்கு புதிய தேர் ஏற்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, புதிதாக தேர் செய்ய, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், பொதுநல நிதியில் இருந்து, 28.40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் முன்னிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது.பணி துவங்கி ஓராண்டாகியும், 70 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன.