சென்னை தினத்தையொட்டி குறும்படப் போட்டி
‘சூப்பர் சென்னை’ அமைப்பு ‘நம்ம கதைகள்’ என்கிற குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.;
சென்னை நகரம் தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆண்டுதோறும் சென்னை தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் சென்னை நகரின் பாரம்பரியம், சிறப்பு, அதன் தனித்துவத்தைப் போற்றிக் கௌரவிக்கும் வகையில் ‘சூப்பர் சென்னை’ அமைப்பு ‘நம்ம கதைகள்’ என்கிற குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் சென்னை நகர வாழ்க்கை, வீதிகள், மலரும் நினைவுகள், அன்றாட நிகழ்ச்சிகள், அதன் சிறப்புகள் எனப் பல்வேறு பிரிவுகளில் குறும்படங்களை இயக்கலாம். இந்தப் போட்டியில், சென்னை நகரை ஒவ்வொருவரும் எப்படிப் பார்க்கிறார்கள், அதன் அழகு, வசீகரம், காலத்தால் அழியாத சிறப்புமிக்க இடங்கள் - அவற்றின் மாற்றம் என அவரவர் ரசனைக்கு ஏற்ப குறும்படமாக எடுத்து அனுப்பலாம். குறும்படங்களை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வந்துசேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.பழங்காலச் சின்னங்கள் முதல் மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் வரை இந்த நகரத்தை மறக்க முடியாததாக மாற்றும் பல விஷயங்களைக் கண்டுபிடித்துக் காட்சிப்படுத்த இந்தப் போட்டி மக்களுக்கு அழைப்புவிடுக்கிறது. அவை உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயம், நீங்கள் பார்த்த மறக்க முடியாத நிகழ்ச்சி, உங்களைக் கவர்ந்த இடங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் போட்டியில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாணவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், பொது மக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இந்தக் குறும்படத்தை ஸ்மார்ட் போன் அல்லது வீடியோ கேமரா என எதில் வேண்டுமானாலும் எடுத்து அனுப்பலாம். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு வயது தடையில்லை.பரிசளிப்பு விழா ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நடைபெறும். சென்னை தினத்தில் சிறந்த படைப்புகள் திரையிடப்படுவதோடு முதல் இடம் பிடித்த படத்துக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது ஒரு போட்டி என்பதைக் காட்டிலும் சென்னை நகரின் சிறப்பைப் படைப்பாளர்கள் பார்வையில் உலகுக்குச் சொல்ல சிறந்த வாய்ப்பாக அமையும் என ‘சூப்பர் சென்னை’ அமைப்பு தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் தங்கள் குறும்படங்களை hello@superchennai.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.ஒவ்வொரு குறும்படமும் 5 நிமிடம் வரை இருக்கலாம். அவை சென்னையைப் பற்றி மட்டுமே இருக்க வேண்டும். தனிப்பட்ட நினைவுகள், சமூகச் செய்தி, நகரத்தில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை அல்லது அதன் சுற்றுப்புறங்கள், ஆவணப்படம் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். பாரம்பரியம் மிக்க நகரின் பெருமையைப் பரப்புவதுதான் இந்தப் போட்டியின் நோக்கம்.