நாமக்கல் அமச்சி அம்மன் கோவில் ஆடி திருவிழாவில் பால்குட ஊர்வலம்!
பால்குட ஊர்வலத்தை நாமக்கல் நகர் மன்ற 4- வது வார்டு கவுன்சிலர் சசிகலா சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்.;
ஆடிமாதம் என்றால் அம்மன் மாதம் என்பர். ஆடிமாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோயில்களில் பொதுமக்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பால்குடம் எடுத்தல், அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி வழிபடுதல், கோவிலில் கூழ் ஊற்றுதல் என பெண்கள், குழந்தைகள் என விழாக்கோலமாக இருக்கும்.நாமக்கல் அடுத்த சின்ன முதலைப்பட்டியில் அமச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-வது வெள்ளி அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பால்குட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அமச்சி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பம்பை உடுக்கை, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அமச்சி அம்மன் கோயிலுக்கு வந்தனர். முன்னதாக பெரியவீதியில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் பால் குடங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது.ஊர்வலத்தை நாமக்கல் நகர் மன்ற 4- வது வார்டு கவுன்சிலர் சசிகலா சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது செல்வகணபதி கோவில், பகவதி அம்மன் கோவில், மற்றும் செல்லக்குமரன் கோவில் வீதி வழியாக சென்று அமச்சி அம்மன் கோவிலை வந்தடைந்தது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பால்குடங்களை தலையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், பருவமழை பெய்ய வேண்டியும் அமச்சி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை ஆடி வெள்ளி பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.