புதிய பால் பண்ணை திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
பரம்புகாடு பகுதியில் கட்டப்பட்டு புதிய பால் பண்ணை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், அணியாபரநல்லூர் ஊராட்சி பரம்புகாடு பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பால் பண்ணை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (06.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு தெரிவித்ததாவது : தூத்துக்குடி பால் ஒன்றியம் 2019 ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை விவகார எல்லையாகக் கொண்டு 150 சங்கங்களில் இருந்து 2147 பால் உற்பத்தியாளர்கள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு உத்தேசமாக 25000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தூத்துக்குடி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் பால் குளிர்விப்பு நிலையங்கள் 7ன் மூலம் நாள்ளொன்றுக்கு உத்தேசமாக 25000 லிட்டர் பால் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஒன்றிய பால் சேகரிப்பு பணியில் உத்தேசமாக 16 எண்ணிக்கை பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள் செயல்படுகிறது. ஒன்றியத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு உத்தேசமாக 28000 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டு தொகை பால் பொருட்கள் மற்றும் உபபொருட்கள் விற்பனை தூத்துக்குடி பால் ஒன்றியத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் தற்போது பால் விற்பனைக்காக நான்கு மொத்த பண வசூல் முகவர் விநியோக வழித்தடமும் ஒப்பந்த வாகன விநியோக வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில் ஆவின் Kiosk பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணப்பட்டுவாடா பத்து தினங்களுக்கு ஒரு முறையும் ஊக்கத்தொகையானது மாதம் ஒரு முறையும் நிலுவையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பால் பண்ணை திட்டப்பணிகளை இன்று நான் பார்வையிட்டு பண்ணையில் இயந்திரங்களை துரிதகதியால் பொருத்தி இத்திட்டத்தினை விரைவாக முடித்திடவும், தற்போது மத்திய அரசின் நிதி உதவியுடன் 50000 லிட்டர் கொள்திறன் கொண்ட பால் பண்ணை வளர்ச்சி பணிகள் ரூ.46.65 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டேன். 90% பணிகள் முடியும் தருவாயிலுள்ள நிலையில் இப்பணியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் பண்ணையை செயல்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் உதவியுடன் TABCEDCO மற்றும் PO மகளிர் திட்டம் மூலம் கறவை மாட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றது மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. HCL நிறுவனம் விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றியங்களைத் தத்தெடுத்து கறவை மாடுகள் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்ததை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு தேவையான கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு ஆகியவை தடையில்லாமல் ஒன்றியத்தால் விநியோகம் செய்யப்பட்டு, பால் வழங்கும் சங்கங்களுக்கு பால் வழங்கும் இத்திட்டத்திலேயே Spot Acknowledge வழங்கப்பட அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் விற்பனை அதிகரிக்க மினி பார்லர்கள் தமிழ்நாடு அரசின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மினி பார்லர் நடத்த விருப்பமுள்ளவர்கள் ஒன்றிய பொதுமேலாளரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, பொது மேலாளர் (ஆவின்) ராஜ் குமார், திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னா சங்கர் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.