கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம் கல்பாறை பொற்றை பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்துள்ளான். அந்த மாணவன் கொண்டு வந்த, மூன்று சாக்லேட் பாக்கெட்டுகளில் ஒரு பாக்கெட் காலாவதியானதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பாக்கெட்டில் இருந்த காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது 7 மாணவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட மிட்டாய் கடைக்கு சென்று, சாக்லேட்டின் மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த கடையில் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் கப் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக கடையின் உரிமையாளருக்கு, அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.